Wednesday, October 18, 2017

க்ருஷ்ணஜென்ம பூமி



“ஆயிரம் ஐந்தைக்கொண்ட வருடத்தின்முன்னே இங்கு
ஆயர்தம் கொழுந்தாய்க்கண்ட புருடத்தைச் சொல்வதற்கு 
ஆயிரம் யுகங்கள்தோறும் ஆயிரம் நாபடைத்த 
ஆயிரம் ஆதிசேஷன் முயன்றினும் பாயிரத்தின்
ஆயிரம் பங்கில்ஒன்று சொல்லிடல் ஆகாதன்றோ
சேயுறும் அறிவேகொண்ட குறுமதி மானிடன்நான்
தெளிவுறும் வண்ணம்இங்கு எப்படிச் சொல்வேனென்று
அயர்வுறு மயக்கம்கொண்டு தயங்கியே நிற்கின்றேனே” 
__________________





அவனுக்கு எவனுண்டு நேர் ?
இந்த வையத்தில் அவனுக்கு அவனேதான் நேர் 
 அவனுக்கு எவனுண்டு நேர் ?
சின்ன அணுவும்தான் அவனன்றி அசையாது பார் 
பிறப்புற்ற சிறையானதே 
அந்தச் சிறைகூட அவனாலே சிறப்பானதே
 அவனுக்கு கண்ணென்று பேர் 
அது மலர்கொண்ட தேனுண்ணும் வண்டுக்குநேர்
 அவனுக்கு மலரென்று பேர் 
அந்த மலர்வீசும் மணம்என்றும் மனம்தன்னிலே 
 அவனுக்கு மணமென்று பேர் 
அந்த மணமெங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே 
 அவன் அன்பில் கட்டுண்டதேன் ?
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாத தேன் 
 அவனுக்குக் குளிரென்று பேர்
அந்தக் குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே 
 அவன்கொண்ட கவர்ச்சியைப் பார்
அதில் மனம்கொண்ட கிளர்ச்சிக்கு என்னென்றுபேர் ?
 அவன் வண்ணம் கருப்பானதே 
பின்பு அதனாலே கருப்பிங்கு மதிப்பானதே
 அவனெச்சில் வெண்ணைக்குமேல்
கடல் கடைந்திட்ட அமுதொன்றும் சுவையில்லையே
 சிரிப்பென்னைப் பித்தாக்குதே
அந்த சிரிப்பேதான் அதைப்போக்கும் மருந்தாகுதே
 விழிச்சுடர்தான் வானத்து தீ
அந்தத் தீச்சுட்டு நெஞ்செல்லாம் குளிர்கின்றதேன்
 குழலங்கு இசைகூட்டுதே
இன்ப இசைதந்த குழல்அந்த உதட்டுக்குமேல் 
 அமிழ்தந்த உதட்டின் உள்ளே
அன்று அவன்தந்த முத்தத்தில் உதித்திட்டதே 
 அவன் குறும்பு பொல்லாததே 
அது இல்லாத நாள்நேரம் செல்லாததே
 அவன் சொல்லும் பொய்போன்றதே 
அந்தப் பொய்கேட்க மெய்ஓடி நிற்கின்றதே
 அவனுக்கு மெய்யென்று பேர் 
என்றும் அவனின்றி நம்வாழ்வு பொய்யானதே 
 அவனுக்கு மதுவென்று பேர் 
அந்த மதுவுண்ண மனமிங்கு தெளிகின்றதே
அவன் நிற்கப் பக்கத்திலே
பின் ஏதுண்டு செய்வேலை சொர்க்கத்திலே 
அவன் காணக் கொண்டாட்டமே 
என்றும் அவனின்றி மனதுக்குத் திண்டாட்டமே 
 அவனேதான் தூக்கத்திலே 
அவன் இல்லாது மனம்பொங்கும் துக்கத்திலே
 யாரங்கு பார்தன்னிலே..!
அங்கு அவனின்றி மூச்சில்லை திக்கெட்டிலே
 மலையும்தான் பெரிதானதே 
அவன் தளிர்கொண்ட விரல்மீது குடையானதே 
 அவன் போல நட்புக்குமோர் 
அணிசெய்யும் அணியாகத் திகழ்கின்ற தார் ?
 அவனுக்கு நீரென்று பேர்
அந்த நீர்பட்டுக் கல்லிங்கு கரைகின்றதே 
 அவனுக்கு நிலமென்று பேர் 
அவன்மண்ணுக்கு வந்திட்ட நிலவேதான் பார் 
அவன் வேகம் காற்றானதே
அதன் மோகத்தில் மனம்பறக்கும் காற்றாடியே 
 சிறுவாயில் மண்ணானதே
அது வாய்க்குள்ளே தாய்காண உலகானதே 
 சிறிதான அவன்காயமே
அன்று அவன்தொட்டு நின்றிட்ட தாகாயமே 
அவன்செய்த மாயங்களே
விட்டுச் செல்கின்ற தின்பத்தின் சாயங்களே
 அவனாட்டக் கால்வண்ணமே
கொண்ட ஓட்டத்தில் சென்றானே காளிங்கனே 
 அவனாட்டம் தீராதது
அதைக் கேட்டிட்ட உள்ளங்கள் நேராகுது
அதில் கேடிட்ட உள்ளங்கள் நேராகுது
 அவன் நெஞ்சம் பஞ்சானது 
அது அன்பற்ற நெஞ்சத்தில் துஞ்சாதது 
 அவன்கெஞ்சும் பிஞ்சானது
அன்புத் தாயன்று கொண்டிட்ட நெஞ்சாலது
 அவன்கொண்ட கூர்வாளது
போரில் வென்றிட்ட தவன்கொண்ட பேர்தானது 
 அவன்நல்ல குணங்கள் தன்னை
நாமெண்ண யுகம்போகும் முடிக்கும் முன்னே
 அவன் கமலப் பாதங்களே 
நம் மனம்எண்ணப் போமந்தப் பாவங்களே 
அவன்காணப் பிறந்திட்டச் சேய்
ஆதி சேஷன்தான் கடல்மீது அவன்கொண்ட பாய்
 அவன் நாமம் கூறுங்களேன்
அந்த கல்லென்ற மனம்கரைந்து தேறுங்களே 
அவன்சொன்ன பாதைக்கு பேர் 
நீதேடாதே கிட்டாது கீதைக்கு நேர் 
அதில்சொன்ன வார்த்தை களே 
என்றும் பதில்சொல்லும் நின்றங்கு யுகத்துக்குமேல்

யாதும்பே..ராகின்ற தே 
'அது' 'அது'வாக யுகம்பட்டு நிற்கின்றதே
_____________________




க்ருஷ்ணா ... க்ருஷ்ணா... க்ருஷ்ணா ...!
அடடா .. இந்த நாமத்தை  நாவால் உரைத்தாலே மெய் சிலிர்க்கிறதே …! அந்த புண்ணிய பூமியைத் தொட்டு தரிசிக்கும்போது என்னென்ன மாற்றங்கள் உண்டாகுமோ.?
குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா
அவன் புல்லாங்குழல் ஊதி நம்மை மயக்க மாட்டானா ?
என்ற ஏக்கம் நெஞ்சில் இழையோடுகிறது…!

இருபது வருடங்களுக்கு முன்னால் முதன் முதலாக (ஒரே முறை) கண்ணன் அவதரித்தச் சிறையில் நான் நின்ற போது ஏற்பட்ட மெய்  சிலிர்ப்பு  , அதை நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதே..!
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லக் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல ..”

உண்மை தான் கல்லான , முள்ளான என் நெஞ்சும் , கண்ணும் கசிகிறதே..!
சிறையில் இருக்கும் நாம் சுதந்திரமாய் பிறந்தோம் (அப்படி நினைக்கிறோம்..!). நமக்கு விடுதலை அளிக்கும் சக்தி சிறையில் பிறந்தது. என்னே இறை விளையாட்டு. அதில் நமக்கும் ஒரு Part…!
மதுரா நகரம் உத்திரப்பிரதேசத்தில் தில்லியிலிருந்து சுமார் 140 கி மீ தூரத்தில்  உள்ளது. மதுரா , கோகுலம், பிருந்தாவனம் இந்த மூன்றும் உள்ளடக்கியது தான் வ்ரஜ பூமி.
வ்ரஜ பூமியில் இருக்கும் மரம் செடி கொடிகளெல்லாம் ரிஷிகளாம். உயர்ந்த முன்னேறிய ஆன்மாக்களாம். அவர்களிடையே நாம் கணம் நிற்குங்கால் அந்த ஆன்ம நோய் நம்மைத் தொற்றாதா..? இறைவனை அடைய வேண்டும் என்னும் தீ நம்மைப் பற்றாதா..?  க்ருஷ்ணனின் மலர்ப்பாதம் தான் நம்மை ஒற்றாதா..?
க்ருஷ்ணா ... க்ருஷ்ணா... க்ருஷ்ணா ...!
1.   எங்கு திரும்பினாலும் ராதே கிருஷ்ணா என்று ஒலிக்கும் , ராதாவின் பெயர் புராணங்களில் குறிப்பிடப்படவில்லை . மஹாபாரதமோ, பாகவாதமோ ராதாவைக் குறிப்பிடவில்லை. ஜெயதேவருக்குப் பிறகு தான் ராதா உயிர்த்தெழுந்தாள். ஜீவ, பரம ஆன்ம முக்தியை விளக்க ராதா மாதவத்தை விட உத்தமமானது ஏதும் உண்டோ.?
2.   நிதிவனம், ராதாவும் கண்ணனும் இன்றும் ஆனந்த நடம் ஆடுமிடமாகத் திகழ்கிறது. நிதி வனத்தின் ஒவ்வொரு மரமும் கோபிகையாம். தாழ்ந்து தரையைத் துடைக்கும் வண்ணமாகத் திகழும் இவர்களின் பக்தியால் நிதி வன மண் புனிதம் பெற்றது.
அதைத் தொட்டுப் இட்டுக்கொள்ளும் பாக்யம் சிறிதா என்ன..!
வ்ரஜ பூமி மண்ணில் புரண்டால் ஜென்ம சாபல்யம் என்று அக்காலத்தில் அந்த புண்ணிய மண்ணில் தன் உடல் தோயப் புரள்வார்களாம்…!



 


No comments:

Post a Comment